தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 11 பெண் ஆட்சியர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. துடிப்புடன் மக்களுக்கு சேவையாற்றுவதே இப்பெண் ஆட்சியர்கள் முக்கியக்குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றத்திலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுவருகிறார். அந்த வரிசையில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம். தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சித்தலைவர்களில் 11 இளம் பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்களை நியமித்திருப்பதுதான் மக்கள் அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள், அதிலும் துடிப்புடன் இருக்கும் இளம் பெண்கள் மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும், நம் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது அறிந்த விஷயமே. இந்நிலையில் 11 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர்களை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. மேலும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக பதவி ஏற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் முக்கியமானது. இந்நேரத்தில் இந்த 11 பெண் ஆட்சித்தலைவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் கடந்து வந்த பாதை, மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து இங்கு நாமும் அறிந்து கொள்வோம்.
தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி: சட்டம் படித்த திவ்யதர்ஷினி தன்னுடையக் கல்லூரியின் இறுதி ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வு எழுத முயன்றும் இரு தேர்வுகளுக்கு நடுவில் அவரால் வெற்றி இலக்கினை அடையவில்லை. இருந்தப்போதும் 2010 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வினை எழுதி அகில இந்திய அளவில் முதல் இடத்தினைப்பெற்ற பெருமைக்குரியவர் திவ்யதர்ஷினி. 2011 ஐ.ஏ.எஸ் பிரிவில் உள்ள இவர், 2012-2013 ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தின் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மயிலாடுதுறையில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதோடு 2016 ல் துணை உள்துறை செயலாளராக இருந்து 2017 ல் பொதுப்பணித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் சென்னை பெருநகர மாநகராட்சியில் இணை ஆணையராகவும் பதிவி வகித்த அவர் பின்னர் திருச்சி ஆட்சியராக பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் முதல்வரின் உத்தரவின்படி, 2021 ஆம் ஆண்டு மே மாதம் தர்மபுரி ஆட்சிராக பணியமர்த்தப்பட்டார்.
இவர் மக்களின் பிரச்சனைகளை விரைவில் அணுகி அதற்கான தீர்வுகளை கண்டுவருகிறார். மேலும் தற்பொழுது தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மூலம் பெறப்படும் மக்களின் பிரச்சனைகளை அணுகுவதோடு, விரைவாக அதற்குரிய தீர்வினையும் காண்கிறார். மேலும் ஊடகங்களின் வாயிலாக எந்த பிரச்சனை அறியப்பெற்றாலும் உடனடி தீர்வுக்கண்டு மக்களிடம் நற்பெயரினை பெற்றுவருகிறார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.
திருவாரூர் ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன்: கேரள மாநிலத்தை பூர்விகமாகக்கொண்ட காயத்ரி கிருஷ்ணன் ஒரு கிளாசிக்கல் டான்சர். இவர் 2013-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் பொள்ளாச்சியின் துணை ஆட்சியராக பணியாற்றினார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழி எப்பொழுதும் இருபுறமும் பெரிய பெரிய மரங்களோடு அழகாக காட்சியளிக்கும். ஆனால் இச்சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. எனவே மீண்டும் பொள்ளாச்சியின் அழகினைக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக சாலைகள் அமைப்பதற்காகப் பிடுங்கப்பட்ட மரங்களை மீண்டும் நடவு செய்யும் முறையினை அறிமுகப்படுத்தியவர் காயத்ரி.
இதோடு பொள்ளாச்சி – கோவைக்கு செல்லும் பேருந்துகள் அதி வேகத்துடன் செல்வதன் காரணமாக பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. எனவே இதனைத்தடுக்கும் விதமாக, பேருந்துகளில் வேகத்தைக்கட்டுப்படுத்த வேக கட்டுப்பாடு கருவிகளை நிறுவ உத்தரவிட்டார். இவர் கோவை மாவட்டத்தின் வணிகவரி கூட்டு ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுர ஆட்சியர் ஜே. யூ சந்திரகலா: கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2013 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச்சேர்ந்த இவர், முதலில் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் திருப்பத்தூரின் துணை ஆட்சியராக மாற்றப்பட்ட பின்பு, ஒசூரின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதோடு இவருக்கு மகளிர் லிமிடெட் மேம்பாட்டுக்கான தமிழக கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுது முதல்வரின் உத்தரவின் படி, ஜூன் மாதம் முதல் ராமநாதபுர மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்: 2013 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச்சேர்ந்த இவர், விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக பணியாற்றினார். தற்பொழுது ஸ்ரேயா பி சிங் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
நீலகிரி ஆட்சியர் ஜெ இன்னசென்ட் திவ்யா: 2009 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச்சேர்ந்த இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் முக்கிய விஷயமாக அமைந்தது. இதோடு பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களின் வாழ்க்கையினைப் பாதுகாப்பதும் இவருக்கு சவாலான விஷயமாக மட்டுமில்லாமல், தனித்துவத்துவமான அம்சமாகவும் விளங்கியது. இருந்த போதும் எதைக்கண்டு அஞ்சாமல் தனது பணியினை செம்மையாக மேற்கொண்டதை நாம் அனைவரும் செய்திகளின் வாயிலாக நாம் அறிந்திருப்போம். குறிப்பாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, செகுர்வலி யானைகள் நடைப்பாதையில் உள்ள அங்கீகரிப்படாத சுற்றுலா ரிசார்ட்டுகளை அகற்றியதோடு, 38 ரிசார்ட்டுகளை மூடவும் செய்தார்.
இதோடு கடந்த 4 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்துவருவது மிக மகிழ்ச்சியாக உள்ளது எனவும், யுனெஸ்கோ அறிவித்த உயிர்க்கோள் பகுதியான நீலகிரியினை அதன் பழமை மாறாமல் பராமரித்து வருவதாகவும், ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர் இங்கு வாழும் மக்களுக்கும், விலங்குகள் மற்றும் முழு பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்ததாகவும் ஆட்சியர் திவ்யா கூறுகிறார். பழங்குடியின மக்களுக்களைச் சென்று பார்ப்பதும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அளிப்பதையும் முக்கியப்பணியாகவும் கொண்டுள்ளார் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற காலக்கட்டத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.
சென்னை ஆட்சியர் ஜெ. விஜயராணி: 2013-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச்சேர்ந்த விஜயராணி, வானமாய் நீ! மழையாய் நான்! என்ற புத்தகத்தினை வெளியிட்ட ஒரு இலக்கிய ஆர்வலரும் ஆவார். முதலில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் கூடுதல் வேளாண் இயக்குநராகவும் பணியாற்றினார். தற்பொழுது சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
அரியலூர் ஆட்சியர் பி.ரமண சரஸ்வதி: தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த இவர், ரசாயண பொறியல் பட்டதாரி. 1999-2000 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சிவில் சர்வீஸில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2009 -2011 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாவட்டத்தின், வருவாய் அதிகாரியாக பணியாற்றினார். மேலும் 2004 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தின் வருவாய்ப் பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் 2012- 2017 வரை சிவில் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என ஈபிடிஎஸ் செயல்படுத்த ரமணா முக்கியப்பங்கு வகித்தார். குறிப்பாக பல துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளை வழங்குவதில் ஆகியவற்றின் ஒரு பகுதியாக விளங்கினார் ரமண சரஸ்வதி.
இந்நிலையில் தற்பொழுது ஜூன் 16 ஆம் தேதி அரியலூர் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் மாவட்டத்தின் பொதுவான கருத்தினை மாற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஆட்சியர் பி.ஸ்ரீ வெங்கடப்பிரியா: சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்த இவர், சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவர் 2005 ஆம் ஆண்டு தர்புமரி மாவட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தின் வருவாய் அதிகாரியாக பணியாற்றினார். இவர் 2011 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வினை அடைந்த இவர், 2017 ஆம் ஆண்டு பட்டு வளர்ப்பு இயக்குநராக பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து பி.ஸ்ரீ வெங்கடப்பிரியா 2020 ஆம் ஆண்டு நவம்பரில் பெரம்பலூர் ஆட்சியராகப் பொறுப்பேற்று பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு: மதுரையைச் சேர்ந்த கவிதா அரசு அதிகாரியாக மட்டுமில்லாமல், ஒரு பரதநாட்டியக்கலைஞராகவும் இதுவரை சுமார் 600 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். கவிதா துணை ஆட்சியராகி வேலூர் மாவட்டத்தின் வருவாய் பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் உதவி ஆணையராகவும் பின்னர் சென்னையில் உள்ள மதுபான உற்பத்தி நிலையங்களில் கலால் மேற்பார்வை அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் நிர்வாகத்தில் அனைவரையும் ஈர்கக்கூடிய வகையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டதால் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு நிலைக்கு உயர்த்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சாலைத்துறை திட்டத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான இணை ஆணையராக பணியாற்றினார். இதோடு முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைக்கான டிஆர்ஓ வாகவும் பின்னர் சென்னை மாவட்டத்திற்காக டி.ஆர்.ஓ வாகவும் பணியாற்றினார். மேலும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழககத்தின் பொது மேலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில்தான் அரசின் உத்தரவின் படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் புதுக்கோட்டை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் எம். ஆர்த்தி: 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவினைச்சேர்ந்த ஆர்த்தி, டி.என் சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்பொழுது 2021 ஜூன் மாதம் முதல் காஞ்சிரம் மாவட்ட ஆட்சியராக அரசின் உத்தரவின் படி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுத்துறை ஆட்சியர் ஆர். லலிதா: 2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் 12 வது இடத்தினைப்பெற்றவர் லலிதா. இவர் அரசுப்பணிகளில் சேர்வதற்கு முன்னதாக சென்னையில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். பின்னர் சென்னை பெருநகர மாநகராட்சியில் இணை ஆணையராக பணியாற்றினார். இந்நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகப்பட்டனத்திலிருந்த மயிலாடுதுறை தனிமாவட்டமாக மாற்றப்பட்டது. தற்பொழுது இம்மாவட்டத்தின் ஆட்சியராக லலிதா பொறுப்பேற்றுள்ளார்
மயிலாடுதுறையில் உள்ள உட்கட்டமைப்பு பிரச்சனைகள், சாலை இணைப்பு மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு குறித்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆட்சியர் லலிதா கூறியுள்ளார். மேலும் இம்மாவட்டத்தில் வரலாற்று பொக்கிஷங்களான பூம்புகார், தரங்கம்பாடி ஆகியவை இருப்பதால் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக உள்ளது. எனவே மயிலாடுத்துறையினை சுற்றுலாத்தளமாக மாற்றுவதோடு மட்டுமில்லாமல் இம்மாவட்டத்தில் விவசாயிகளின் வருவாயினை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.