உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கும்  திட்டம் மகளிருக்கு அதிகாரமளிக்கும் செயல் என  75% அஇஅதிமுக, பாஜக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.   

கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.  

 

                 

உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கும்  திட்டம் மகளிருக்கு அதிகாரமளிதுள்ளதா?  

  ஆம் இல்லை   பதில் இல்லை  மொத்த எண்ணிக்கை 
அதிமுக + பாஜக கூட்டணி  74.1%   17.9% 8.1%   100.0%
திமுக + காங்கிரஸ் கூட்டணி  52.6%    39.2% 8.3% 100.0%
 அமமுக  33.9%  20.3% 45.8% 100.0% 
 மக்கள் நீதி மய்யம் 40.0%   48.9% 11.1%    100.0%
நாம் தமிழர்  46.4%   35.2% 18.4% 100.0%
இதர கட்சிகள்  49.2%   26.2% 24.6%  100.0%
மொத்தம்  60.0%    29.8% 10.2% 100.0%

ஏபிபி நாடு நடத்திய ஆய்வின் படி, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கும்  திட்டம் மகளிருக்கு அதிகாரமளிதுள்ளதாக 60 சதவீத வாக்காளர்கள். இவ்வாறு தெரிவித்ததில், 74.1% பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களும்,52.6%  பேர் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களும் ஆவர். கிட்டத்தட்ட, 29.8% வாக்காளர்கள் அதிகாரமளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 48.9% பேர் மக்கள் நீதி மய்யம் கட்சி வாக்காளர்களும், 35.2% பேர் நாம் தமிழர் கட்சி வாக்காளர்களும் அடங்குவர். 

மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி திட்டம்:  தேர்தல் வாக்குருதியினை நிறைவேற்றும் வகையில் சாதாரண பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பு, பயனாளிகளிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.       

2011-ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கட் தொகையில் பெண்கள் 49.80 சதவீதமாக உள்ளனர். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போதைய மாறிவரும் சமூக, பொருளாதார சூழ்நிலையில் மகளிர் உயர்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுய தொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாததாக விளங்குகிறது. 

தமிழ்நாட்டில், பணிபுரியும் ஆண்களின் விகிதத்தை விட பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு (Work Participation Rate) 31.8 சதவீதமாகவும் ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மகளிரும் சிறப்பான பங்களிப்பினை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளில் மகளிரின் பங்களிப்பு விகிதத்தினை உயர்த்தவேண்டியது அவசியமாகிறது. உயர்கல்வி கற்பதற்காகவும், பணி நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், மேற்கூறிய சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்கு உகந்ததாக அமையும்.


இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board), பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் ஆணையை அரசு வெளியிட்டது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நகரப்பேருந்துகளின் வாயிலாக ஆண்டுடொன்றுக்கு சுமார் ரூ.3,000 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்படுவதாகவும், பணி புரியும் மகளிர் / உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதனால், நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்குவதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.

மேலும், இதன் மூலம் ஆண்டொன்றிற்கு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ.1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு, இழப்புத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசு ஆணையிட்டது. மேலும், உள்ளூர் பேருந்துகளில் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் ஆகியோர்களுக்கும் இலவச பயணச் சீட்டு வழங்க முதல்வர் ஆணையிட்டார்.