உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அநேக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த 2021- 22 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், " தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியான உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இந்த அரசின் ஒரு முக்கிய அடையாளமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உரிய சரிபாா்த்தலுக்கு பிறகு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 கோரிக்கைகளுக்கு நல்ல முறையில் தீா்வு காணப்பட்டுள்ளன.
முதல்வரிடம் அளிக்கப்பட்ட அனைத்து குறைதீா் மனுக்களுக்கும் இந்த அரசு பதவியேற்ற நூறு நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுக்களுக்கு விரைவாக தீா்வு காணப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, மனநிறைவளிக்கும் வகையில் தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த அரசு இனி வரும் காலங்களிலும் இதே முறையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு இந்தச் சாதனை ஒரு சிறந்த அடையாளம் " என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அரசு பதவியேற்ற நூறு நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்ற அரசியல் வாக்குறுதியை மு.க ஸ்டாலின் எந்தளவுக்கு செயல்படுத்தியுள்ளார்?
முழுமையாக செயல்படுத்தியுள்ளார் | ஓரளவுக்கு செயல்படுத்தியுள்ளார் | சுத்தமாக செயல்படுத்தவில்லை | பதில் இல்லை | மொத்த எண்ணிக்கை | |
அதிமுக + பாஜக கூட்டணி | 47.6% | 37.4% | 9.6% | 5.4% | 100.0% |
திமுக + காங்கிரஸ் கூட்டணி | 47.9% | 39.8% | 8.7% | 3.7% | 100.0% |
அமமுக | 29.4% | 38.2% | 23.5% | 8.8% | 100.0% |
மக்கள் நீதி மய்யம் | 36.4% | 27.3% | 9.1% | 27.3% | 100.0% |
நாம் தமிழர் | 20.5% | 41.1% | 17.8% | 20.5% | 100.0% |
இதர கட்சிகள் | 23.7% | 42.1% | 26.3% | 7.9% | 100.0% |
மொத்தம் | 45.2% | 38.8% | 10.3% | 5.8% | 100.0% |
'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, 45.2 சதவீத வாக்காளர்கள், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு தெரிவித்தவர்களில், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களத்தவர்களில் 47.9% பேரும், அதிமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்தவர்களில் 47.6% பேரும் என்பது குறிப்பிடத்தக்கது. 10.3% வாக்காளர்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் பின்னணி என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றவுடன், "எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம்" என்ற உயரிய நோக்கத்தோடு 5 திட்டங்களுக்கு மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்தார். அதிக, மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அரசாணையும் கையெழுத்தானது.
இத்திட்டத்திற்காக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கப்பட்டு, இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் சிறப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டார்.முதலமைச்சர் தனிப்பிரிவில் இயங்கி வரும் பிரிவுகளில் ஒரு பிரிவை (பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர்கள், உதவியாளர்கள், தட்டச்சர்கள்) உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையோடு இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டது.
மனுக்களை பரிசீலிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையில் (TN-ega) இயங்கிவரும் முதலமைச்சரின் உதவி மைய குழுவினை (CM-Helpline) பயன்படுத்திக்கொண்டு அனைத்து மனுக்களையும் பதிவேற்றம் செய்யப்பட்டது. பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை/ தீர்வு கண்காணிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு கண்காணித்தது.
அனைத்து அரசு துறை தலைமை அலுவலகங்களிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை மூலம் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை / தீர்வு குறித்து கண்காணித்திட ஒரு தொடர்பு அலுவலர் (Nodal Officer) கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும், அனைத்து மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கும் அலுவலரைக்கொண்டு தனிப்பிரிவை ஏற்படுத்தி மனுக்களின் மீதான நடவடிக்கையினை கண்காணித்திட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்திரவிடப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள்: இந்தப் பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அவற்றை உட்கட்டமைப்பு (புதிய சாலைகள், மேம்பாலங்கள்), சமூக சொத்துக்கள் (பள்ளிகள், மருத்துவமனைகள்) மற்றும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என மூன்றாகப் பிரித்து சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
தனிநபர் கோரிக்கைகளை பொறுத்தவரை, முடிந்த அளவு விரைவாக அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுதியான அனைத்திற்கும் உடனடி தீர்வும், முடியாதவற்றிற்கு என்ன காரணத்தினால் கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணமும் அளிக்கவும், தொடர்ந்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில் மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வழிகாட்டுதல்கள் தரப்பட்டது.