ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, திமுக தலைவர்கள் மத்திய அரசை 'ஒன்றிய அரசு" என்று அழைத்து வருகின்றனர். முன்னதாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை, ஒன்றிய அரசு என ஏன் தமிழ்நாடு அரசு சொல்கிறது என கேள்வி எழுப்பினார்.

 

                     

 

இக்கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதாகவும் கூறினார். ஒன்றிய அரசு என்ற சொல்லை தொடர்ந்து சொல்வோம் என்ற முதல்வர், ஒன்றிய அரசு என்ற சொல் தவறான சொல் அல்ல என்றும் தெரிவித்தார். 

 

கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.  

மத்திய அரசு என்பதற்கு பதிலாக 'ஒன்றிய அரசு' என திமுக அரசு குறிப்பிட வேண்டியது அவசியமா?     

  தேவைதான்  தேவையில்லை   பதில் இல்லை  மொத்த எண்ணிக்கை 
அதிமுக + பாஜக கூட்டணி  53.2%  32.5% 14.3%   100.0%
திமுக + காங்கிரஸ் கூட்டணி  55.9%   27.2% 16.9% 100.0%
 அமமுக  40.5%   26.2% 33.3% 100.0% 
 மக்கள் நீதி மய்யம் 33.3%   54.5% 12.1%    100.0%
நாம் தமிழர்  42.9%   35.2% 22.0% 100.0%
இதர கட்சிகள்  43.5%   28.3% 28.3%  100.0%
மொத்தம்  53.1%   30.2% 16.7% 100.0%

'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது தேவைதான் என  53.1 சதவீத வாக்காளர்கள்  தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்ததில், 53% வாக்காளர்கள் அதிமுக கூட்டணி கட்சி வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரசியரியாக, 30% பேர், இது தேவையற்ற அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த 30.2 % பேரில், 54% பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.    

ஒன்றிய அரசு:  இந்திய அரசியலமைப்பின்படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக - 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், "இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும், "இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது.  

நெருக்கடி காலங்களில் ஒன்றிய அரசுக்கு வலுச்சேர்க்கும் பிரிவுகளும் மற்ற நேரங்களில் உண்மையான கூட்டாட்சியாகவும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர், அயல்நாடுகள் ஆக்கிரமிப்பு, ஆயுதக்காலம் மற்றும் நிதி நெருக்கடி காலங்களில் மாநில அரசின் பல அதிகாரங்களைச் செயலிழக்கச் செய்து ஒன்றிய அரசு வலுவாகச் செயல்படும். எனவே, சக்திவாய்ந்த ஒன்றிய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை  (A federation with strong centralizing tenedency)  இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்படுள்ளது.     

அரசியலமைப்பு : இந்திய அரசியலமைப்பின் முதல் சரத்தில் (Article 1), இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாகும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, குறைந்தது இரண்டு மாநிலங்கள் கொண்ட நிலப்பரப்பு தான் இந்தியாவாக இருக்க முடியும். உலகின் எந்த நிலப்பரப்பையும் இந்தியா அடையப்பெற்றாலும், நிலவை ஆகிரமித்து ஆட்சியமைத்தாலும் இரண்டு மாநிலங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். 

மாநிலம் என்றால் என்ன?  ஒவ்வொரு மாநிலத்திற்கு ஆளுநர் என்று ஒருவர் இருப்பார் (சரத்து 153), ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருக்க வேண்டும் (நிர்வாகத் துறை - சரத்து 163), ஒவ்வொரு மாநிலத்திற்குமென சட்டமன்றம் ஒன்று இருக்கும், இது ஆளுநரையும் கொண்டு இருக்கும் (சட்டமியற்றும் துறை,  சரத்து 168 ) , மாநிலம் ஒவ்வொன்றுக்கும் ஒர் உயர்நீதிமன்றம் இருக்கும் (நீதித்துறை சரத்து,214)  என்று இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கிறது.

சுருங்கச் சொன்னால், ஆளுநர், மாநில அமைச்சரவை, மாநில உயர்நீதிமன்றம் இல்லாத இந்தியாவை கற்பனை செய்யமுடியாது. 

ஏன் ஒன்றிய அரசு:  சுதந்திற்குப் பிறகு இந்தியா என்ற ஒற்றை தேசம் கட்டமைக்கப்பட்டது. இந்த தேசம் கட்டமைப்பில் பெரும்பாலும் உயர் வகுப்பினரின் பங்கு முக்கியத்தும் பெற்றது. உண்மையாக, ஆங்கில அறிவு பெற்று மேற்கத்திய அரசியல் தத்துவத்தில் ஆர்வம் கொண்ட இந்திய உயர் வகுப்பினரின்  பிரதிபலிப்பாக இந்தியா தேசம் கட்டமைக்கப்பட்டதாக சுடிப்டா கவிராஜ் (Sudipta Kaviraj) உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கு இணையாக தமிழ்ச் சமுதாயத்தில் திராவிட இயக்கம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் இயக்கம் உருவானது. பிராமணரல்லாதோர் இயக்கம்  என்பதைத் தாண்டி, எது தேசம்? தேசத்தின் அடையாளத்தை யார் நிர்ணயிப்பது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதாக அமைந்தது.  

19 வது நூற்றாண்டின் பிற்பகுதியில்,  இத்தாலியில் வாழ்ந்த பிரபல எழுத்தாளரும், தேசியவாதியுமான  Massimo Taparelli d'Azeglio தனது வாழ்க்கை குறிப்பு பக்கத்தில், "  நாம் இத்தாலியை உருவாக்கி விட்டோம், இனி நாம் செய்ய வேண்டியது  இத்தாலியார்களை உருவாக்குவது தான்" என்று தெரிவித்துள்ளார்.  ஆனால், இந்தியா போன்ற மிகவும் தொன்மையான நாகரிக நாட்டில் இந்த வாதம் அர்த்தமற்றதாய் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்  தெரிவிக்கிறார். 

ஒருவர் ஒரே நேரத்தில் நல்ல இஸ்லாமியாராகவும், தமிழராகவும், இந்தியராகவும் இருக்கலாம். உதாரணமாக, 2008ம் ஆண்டு சிஎஸ்டிஎஸ் ஆய்வு மையம் நடத்திய, 'State of Democracy in South Asia: A Report' என்ற ஆய்வறிக்கையில், நாட்டில் 57% இஸ்லாமியர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதில் அதிகம் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளனர்.      

 

  சராசரி இந்தியர்கள் பதில்   இஸ்லாமியர்  பட்டியலின  வகுப்பினர்   
மிக்க பெருமிதம் கொள்கிறேன் 60 57 56
பெருமிதம் கொள்கிறேன்  29 31 29
பெருமிதம் இல்லை  2 1 3
சுத்தமாக பெருமிதம் இல்லை  1 2 2
பதில் தெரியவில்லை  8 8 10

 

 இந்துக்களை விட,  'இந்தியன்' என்ற அடையாளத்தை இஸ்லாமியர்களே அதிகளவு பேணிக்காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

நான் இந்தியன் மட்டுமே  இந்து  முஸ்லீம்  கிறிஸ்துவம்  தேசிய சாராசரி 
  34% 43% 30% 35% 

                                                                    State of Democracy in South Asia: A Report (2008) 

தேசியளவில் 35% பேர் இந்தியன் என்ற ஒற்றை அடையாளத்துடன் தங்களை வெளிபடுத்த விரும்புகின்றனர். இதில், மற்ற மதப்பிரிவினரை விட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், 65% பேர் (தமிழர், தெலுங்கர்) போன்ற இதர அடையாளங்களை பேணிக் காக்க விரும்புகின்றனர். 

எனவே, ஒன்றிய அரசு என்று அழைப்பதினாலும், மாநில சுயாட்சி குறித்து பேசுவதினாலும் இந்தியன் என்ற அடையாளம் குறைந்து போவதில்லை.