கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமயிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றது. கடந்த மே 7ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக மு.க ஸ்டாலின் பதிவியேற்றார். இதையொட்டி, கடந்த ஜூன் 21ம் தேதியன்று, 16வது சட்டமன்றப் பேரவையின் தொடக்கமாக இடம்பெற்ற ஆளுநர் உரையில், அரசின் உண்மையான நிதிநிலையை சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை உள்ளவாறாக விவரிக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று பொது வெளியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதிமுக ஆட்சி நிதிநிலை தொடர்பாக திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது முக்கியமானதா?
முக்கியத்துவம் வாய்ந்தது | முக்கியத்துவம் இல்லை | பதில் இல்லை | மொத்த எண்ணிக்கை | |
அதிமுக + பாஜக கூட்டணி | 63.4% | 23.1% | 13.5% | 100.0% |
திமுக + காங்கிரஸ் கூட்டணி | 62.1% | 19.6% | 18.3% | 100.0% |
அமமுக | 52.6% | 21.1% | 26.3% | 100.0% |
மக்கள் நீதி மய்யம் | 48.1% | 29.6% | 22.2% | 100.0% |
நாம் தமிழர் | 50.7% | 20.0% | 29.3% | 100.0% |
இதர கட்சிகள் | 39.0% | 26.8% | 34.1% | 100.0% |
மொத்தம் | 60.9% | 21.3% | 17.7% | 100.0% |
'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, தமிழ்நாட்டில் 60.9 சத விகித வாக்காளர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வெளியிட்ட வெள்ளை அறிக்கை மிகுந்த முக்கியதத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். அவ்வாறு தெரிவித்தவர்களில், 63% பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள். திமுக கூட்டணிக்கு வாக்களித்த 62% பேரும், அமமுக கூட்டணிக்கு வாக்களித்த 52% பேரும் வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளை அறிக்கையின் பின்னணி என்ன?
நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்,
- தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துதல்.
- தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, அரசு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள் குறித்து துல்லியமான மற்றும் விரிவரின அறிக்கையை வழங்குதல்.
- அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது.
மாநிலத்தின் நிதி நிலை: 2006-13 காலகட்டத்திற்குள்ளான 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு வருவாய் உபரியை அடைந்திருந்தது. 2013 ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை 61,320 கோடி ரூபாயாகும். இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.16 சதவீதமாகும்.
2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 ஆண்டுகளில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சராசரி வருவாய் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதமாக இருந்தபோது, தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை முறையே 1.5 சதவீதமாகவும் 1.4 சதவீதமாகவும் இருந்தது.
2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான நிதிப் பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாகும். இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.43 சதவீதமாகும். 2016-2021 ஆம் ஆண்டு காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய்ப் பற்றாக்குறையின் விகிதம் 52.48 சதவீதமாகும். இவ்விகிதம் 2011-16 காலகட்டத்தில் 14.94 சதவீதமாக இருந்தது.
மூலதனச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை:
பொதுவாக, நிதிப் பற்றாக்குறைகள் நியாயமான வரம்புகள் வரை வரவேற்கத்தக்கது. ஏனெனில், மூலதன செலவினங்களுக்காக அரசுகள் சட்டப்பூர்வமாக கடன் பெறுவதனால், மேலும் வளர்ச்சி பெருக்கப்பட்டு, அதள் விளைவாக அதிக வருவாய் கிடைக்கப்பெறும். எனவே வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக செலவினங்களுக்காக கடன்கள் பயன்படுத்தப்படும் வரையில் 3 சதவீதம் வரையிலான நிதிப் பற்றாக்குறை சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கும்.
நிதிப் பற்றாக்குறையில் ஓர் கணிசமான பங்கு வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக பயன்படுத்துவதால், தற்போதைய நிதிப் பற்றாக்குறை அளவுகள் நிலையற்ற தன்மையுடன் உள்ளது. 2017-18 ஆம் ஆண்டு முதல், நிதிப் பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறையின் பங்கு 50 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக உயர்ந்துள்ளது. எனவே, அரசு பெறும் மூலதனச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக, நடப்புச் செலவினத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீர்திருத்தம் வேண்டும்:
சமீபத்தில் முடிவடைந்த தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ அல்லது கைவிடுவதற்கோ ஒரு காரணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிக்கை இல்லை. தேர்தல் வாக்குறுதியான குடும்ப அட்டை ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் எந்தவொரு வாக்குறுதியிலும் குறிப்பிடப்படாதவாறாக, 14 அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பினை வழங்கியது இந்த அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
வழக்கமான அணுகுமுறையைத் தொடர இயலாது. அணுகுமுறையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டிச் செலவுகளிலிருந்து நாம் மீள முடியும். மற்றொரு பக்கம், வெகு காலத்திற்கு முன்னதாகவே ஒரு பொறுப்புள்ள அரசு பல ஆண்டுகளில் ஒருமுறை செய்ய வேண்டிய, அடிப்படைச் சீர்திருத்தங்களை செய்திருக்க வேண்டும். அதை தற்போது செயல்படுத்துவதற்கான வாய்ப்பாகவே இதனைக் கருத வேண்டும் என்று நிதியமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்தார்.