கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




 


கரூரில் கடந்த 26 ஆம் தேதி சோதனை நடத்த வந்த வருமான வரித்துறையினரிடம் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திமுகவினர் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது சம்பந்தமாக நேற்று பதியப்பட்ட வழக்கில், இன்று ஒரே நாளில் 15 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர்கள் 20வது வார்டு லாரன்ஸ், 16வது வார்டு பூபதி, கணேஷ் முருகன் கிரஷர் மற்றும் நிதி நிறுவன அதிபர் குணசேகரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கரூர் போலீசார் அழைத்துச் சென்றனர். அதே போன்று, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்ட போது தகராறில் ஈடுபட்ட செல்வம் என்பவரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் மீதமுள்ள நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




 


மேலும் நாளை பலர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் ஆளும் கட்சி கவுன்சிலர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 




கரூரில் வருமான வரி துறை சோதனையின்போது அதிகாரிகளை மிரட்டிய  தொழிலதிபர்   குணசேகரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் நகரில் உள்ள கணேஷ் முருகன் கிரஷர் மற்றும் நிதிநிறுவன அதிபர் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளை கணேஷ் முருகன் கிரஷர் உரிமையாளர் குணசேகரன், மற்றும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.  


  இதுகுறித்து வருமான வரித்துறையினர் அளித்த புகாரில்  கிரஷர் உரிமையாளர் குணசேகரன், மற்றும் அவரது அலுவலக அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.