வடகிழக்கு பருவமழை அலர்ட்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து உருவான புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை கொட்டியது. இதனையடுத்து சில வாரங்கள் மழை ஓய்வு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக இன்று (16-11-2025) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் கன மழை
நாளை (17-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுத்து எச்சரிக்கை சுற்றறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்
மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு
எனவே, பேரிடர்களைக் எதிர்கொள்ளும் வகையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், முழு மாவட்டமும் மழையை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தவும், கனமழை முதல் மிகக் கனமழை எச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்படும் எந்தத் தேவையையும் சமாளிக்க போதுமான தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.