வன்னியர் சமூகத்துக்கான 10.5% இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மனு அளித்தார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே சந்திப்பு  நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், “வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம். இடஒதுக்கீட்டுக்கான காரணத்தை புள்ளி விவரத்தோடு பட்டியலிட்டு இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, கூடுதல் தரவுகளை சேகரித்து சட்டப்பேரவையில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.


மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என்றும், வன்னியர் இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என்றும், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடியது எனவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


 



முன்னதாக, தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம்(Supreme Court) மார்ச் 31ஆம் தேதி தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தமிழ்நாடு அரசு மற்றும் பாமக, வன்னியர் அறக்கட்டளை உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பீ.ஆர்.கவாய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும் என்றும், சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடுகளை முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியில் வன்னியருக்கு 10.5% வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண