தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாகவும் பல விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் என பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகின்றன. இதில் சில கட்சிகள், சிலரின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், பாஜக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதியின் புகைப்படத்தை பயன்படுத்தியது. இதற்கு, அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.




இந்நிலையில், தமிழ்வெதர்மேன் பிரதீப் ஜானின் குடும்பப் புகைப்படத்தை ஒரு கட்சி தங்களின் தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது. 


இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘புதிய சட்டங்கள் எல்லாம் வந்து என்ன பயன்?. தேர்தல் நேரத்தில் யார் கவலைப்படுகிறார்கள்?. ஒரு கட்சி எனது அனுமதியில்லாமல் எனது குடும்ப புகைப்படத்தையும், கட்சிக்கு ஆதரவாக எனது மகள் பேசுவதை போலவும் எப்படி விளம்பரப்படுத்த முடியும். அவர்கள் எனது குடும்ப படத்திற்கு பதிலாக, அவர்களின் குடும்ப புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கலாமே” எனப் பதிவிட்டுள்ளார்.