தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில்  மூடியுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக கொடுக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில்  நேற்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கூறியது. மேலும், ஆலையை திறப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நாட்டில் ஆக்ஸிஜனுக்கு தேவை இருப்பதால், சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்ட, ஆக்ஸிஜன் ஆலையை மட்டும் இயக்க அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் வழக்கை மறுநாளைக்கு ஒத்திவைத்தது.




இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஆலைக்கு பதில் நாடு முழுவதும் உள்ள வேறு ஆலைகளில் ஆக்ஸிஜனை உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் கூறியது. மேலும், ஆக்ஸிஜன் உற்பத்திகாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என நீதிமன்றம் யோசனை அளித்தது. ஆனால், ஆலையை நாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இருக்கிறது என்றும், கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்க விரும்பவில்லை எனவும் தமிழக அரசு வாதடியது. மேலும், ஆலையை திறக்கக்கூடாது என கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.




ஆக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்துக்கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்கக்கூடாது என தமிழகம் கூறுவது சரியா ? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர்தான் முக்கிய என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்  நடைபெற்றுது. இதில், பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என்று பலர் பங்கேற்றனர். 




சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆதாரவாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைகளை திறந்தால் அதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும், எங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு நிலவியது. போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.