பெண்களின் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார் என தூத்துக்குடியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1 கோடியே 06 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்த்தை தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மகளிர் உரிமைத் திட்ட துவக்க விழாவில், தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் தாலுகாவை சேர்ந்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி ஏடிஎம் அட்டையினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசியதாவது, பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். தற்போது அவரது வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடைக்கோடி கிராமங்களில் வாழும் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களைத் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பெண்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதைக் கருத்திற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கக்கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதனை பெண்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துமா என்று பலர் கூறிவந்தனர். இன்று அதனை முதலமைச்சர் நிறைவேற்றி காட்டியுள்ளார். பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், பெண்களின் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் 1 கோடியே 45 லட்சம் மகளிர்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இன்று மேலும், 1 கோடியே 06 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர்கள் இந்த உரிமைத்தொகையின் மூலம் பயன்பெறுகிறார்கள். அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதி மத வேறுபாடின்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பெண்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலவர் கலைஞர். இன்று அவரது வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் பெண்களின் நலன்காக்கும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பெண்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சப்-கலெக்டர் கௌரவ்குமார், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.