தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தும் தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக பரவலாக பேசப்பட்டது. புதிதாக தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். 



அந்த ஆலோசனைப்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டார்.  அதில், தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஏசி வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் வினியோகம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதி. மளிகை, காய்கறிகள், இறைச்சி, பலசரக்கு, மீன் கடைகள் தவிர வேற கடைகள் திறக்க அனுமதியில்லை. ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி. டீ கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி. தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதியில்லை. மருத்துவ பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்படலாம். உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்களுக்கு தடை. முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.




இந்நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் விற்பனை நேரம் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலக உத்திரவுபடி இரண்டு நாட்களும் மதுபான கடை நேரம் காலை 8.00 முதல் மாலை 6.00 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.


முன்னதாக, 20ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டின்போது, பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று பகல் 12 மணியோடு டாஸ்மாக் கடைகள் மூடிவிடுமோ என்கிற அச்சத்தில் டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது. அதன் காரணமாக இன்று கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாளை விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குடிமகன்கள் வசதிக்காக நாளையும் கடை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.