மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சார்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு உதவித் தொகையாகும். இதற்கு என்னென்ன தகுதிகள் என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் உயர்கல்வி எந்த விதத்திலும் தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். எனினும் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். 

Continues below advertisement

என்ன தகுதி?

அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது. கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை  வழங்கப்படாது. மாணவர்கள் தேர்வுக்கு முன்பு குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு. குறிப்பாக விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

கேள்விகள் எப்படி கேட்கப்படும்?

இந்த தேர்வுகள் 7 மற்றும் 8ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மன திறன் சோதனை (MAT)மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும். இரண்டு தாள்களிலும் தனித்தனியாகத் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் . இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஒட்டுமொத்தமாகக் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டியது அவசியமாகும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.12,000 என்ற வீதத்தில் மொத்தம் ரூ.36,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில் காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவகாசம் நீட்டிப்பு

அதாவது 2026-2027-ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என 23.10.2026 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் 13.11.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது, மாணவர்களின் நலன் கருதியும் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இக்கால அவகாசம் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.