தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 100வது நாளை எட்டும் நிலையில், கடந்த 2018 மே 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால், அதனை தடுப்பதற்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாகினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. 


இதையடுத்து, ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தமிழக அரசு தொடர்ந்த தடை தொடரும் என்று கூறியது.




 


இந்நிலையில், தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டதால், மற்ற மாநிலங்களில் புதிய ஆலையை தொடங்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. அதில், ஆர்வமுள்ள மாநிலங்கள் அணுகலாம் என்றும் ஸ்டெர்லைட் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.