கொரோனா தொற்றின் 2-வது அலையின் பாதிப்பு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு தினமும் பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தினை கடந்துவருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல நிறுவனங்களில் பணிபுரிந்த பலர் தங்களுடைய வேலைவாய்ப்பினை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தான் கொரோனா பெருந்தொற்று காலம் முடியும் வரை தெற்கு ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னையில் பணிபுரிய 50 மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வேலையில் சேர விரும்புவோர், எம்.பி.பி.எஸ் (MBBS) படித்துள்ளதோடு ஐசியுவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 53 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய நபர்கள் Detailed Notification to DGM G.pdf (indianrailways.gov.in) என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், படிப்பின் விபரம், இதற்கு முன்னதாக ரயில்வேயில் பணிபுரிந்திருந்தால் அதற்கான சான்று, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த விபரம் போன்றவற்றை பூர்த்தி செய்து Covid19cmp20@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மே 21-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்குமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பத்தின் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு ஆன்லைன் அல்லது தொலைப்பேசியின் (Interview through online/ phone call) வாயிலாக மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தெற்கு ரயில்வே கீழ் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முழு நேர ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்களாக வருகின்ற 31.03.2022 வரை அல்லது கொரோனா பெருந்தொற்று காலம் முடியும் வரை பணியில் இருப்பார்கள் எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.