நாட்டில் கொரோனா முதல் அலை பரவலின்போது, சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பெரிதும் உதவியது. அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீரை குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அரசாங்கமும் வீடு வீடாக சென்று இதனை மக்களுக்கு கொடுத்து வந்தனர்.


தற்போது, நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இவைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றியுள்ளது. தற்போது, அவர்களுக்கு அதை ABP நாடு நினைவூட்டுகிறது.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை தயாரிக்கும் முறையினை வெளியிட்டுள்ளது.




 


கபசுரக் குடிநீர்:


சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதோடை, கோஷ்டம், சிறுதேக்கு உள்ளிட்ட 15 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. 



                                 கபசுரக் குடிநீர் தயாரிக்கும் முறை


5 கிராம் கபசுரக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக சுருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.



உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மி.லி/சிறியவர்கள் 30 மி.லி




நிலவேம்புக் குடிநீர்:



நிலவேம்புச் சமூலம், வெட்டிவேர், சுக்கு, கோரைக்கிழங்கு, மிளகு சந்தனத்தூள் உள்ளிட்ட 9 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.



                                 நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் முறை



5 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக கருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.



உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மிலி/ சிறியவர்கள் 30 மிலி 



கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை குறைக்கவும் தடுக்கவுமான முயற்சியில் சித்த மருந்தான கபசுரக்குடிநீரை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி மருத்துவ - ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், கபசுரக்குடிநீருடன், ஆயுஷ்-64 எனும் ஆயுர்வேத மருந்தும் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 7-ஆம் தேதி மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு இதைத் தொடங்கிவைத்தார்.


இதில் ஆயுஷ்-64 மருந்தானது, 1980-களில் மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு நல்ல பலனை அளித்த மருந்தாகும். சளி, காய்ச்சலுக்கான இந்த மருந்து, கொரோனாவின் லேசான, மிதமான பாதிப்பு நிலைகளில் நல்ல பலனை அளித்து வருகிறது என்றும் நாளடைவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனை சோதனைகளில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



கபசுரக் குடிநீரின் பயன்பாட்டையும் ஆய்வுகளில் உறுதிசெய்த அமைச்சகம், இரண்டு மருந்துகளையும் பரவலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. இரண்டு மருந்துகளையும் அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகளுக்கும் லேசான, மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் பொதுவான சிகிச்சையுடன் சேர்த்து வழங்கலாம் என ஆயுஷ் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 


சென்னையை அடுத்த தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், கபசுரக் குடிநீர் இலவச விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்களோ நண்பர்களோ நேரடியாகச் சென்று இதைப் பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனத்தின் இயக்குநர் மீனா குமாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை முடிவைக் கொண்டுசெல்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.