தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்ற தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பையும் தாண்டி அதீத கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பாய்ந்தது. 

இந்த மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே திருநெல்வேலி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் தான் இயக்குநர் மாரி செல்வராஜ் வீடு உள்ளது. வெள்ளம் இரு மாவட்டங்களை சூழந்த நிலையில், உதவி கேட்ட மக்களுக்கு  தேவையானவற்றை அவர் வழங்கினார்.

மேலும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார். 

அதேசமயம் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் சென்றது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விடிய விடிய மீட்பு பணியில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கினார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்ட விவரங்களை தெரிவித்ததோடு, எல்லாரும் நிச்சயமாய் மீட்கபடுவார்கள் .உறவினர்கள் அச்சபடவேண்டாம்” எனவும் நம்பிக்கையூட்டினார். 

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ““என் கலையும் கடமையும்  நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என தன்னுடைய ஏரியாவில் உள்ள வெள்ள நீர் பாதிப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.