நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த மூன்று தினங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 466 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளை சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மருந்து நிறுவனம் தரமணி, கந்தன்சாவடி மற்றும் பெருங்குடியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 2 நபர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அந்த நிறுவனத்தின் மூன்று கிளைகளிலும் பணியாற்றிய 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த பணியாளர்களுக்கும், உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.