தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவர் 20 ஆண்டு காலமாக உள்ள தங்களது திருமண மண்டபத்திற்கு, தீயணைப்புத் துறையில் ஆண்டுதோறும் பெறப்படும் புதுப்பிப்பு சான்று பெறுவதற்காக தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆய்வு செய்து உரிய சான்றிதழ் வழங்குவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று தீயணைப்பு நிலையத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் பெறுவதற்காக சந்தோஷ் வந்துள்ளார். அப்பொழுது தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜாவிடம் தனது திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்பொழுது தீயணைப்பு துறையினர் சான்றிதழ் தயாராக உள்ளது, பணம் பத்தாயிரம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ் அந்த அளவிற்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை சந்தோசிடம் வழங்கியுள்ளார்.
ஆனால் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் மெக்கானிக் ஒருவர், பணத்தைக் கொடுத்துவிட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தோஷ் திருமண மண்டபத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து துரத்திச் சென்று வந்த தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சான்றிதழை, பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு கூறி பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தோஷ் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தன்னை தாக்கியதாக சந்தோஷ், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் திருமண மண்டபத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் சான்றிதழ் பெறுவதற்கு தீயணைப்பு நிலையத்தை அணுகியவுடன் பத்தாயிரம் பணம் லஞ்சமாக கேட்டனர். தான் கொடுக்க மறுத்ததால் தன்னை தீயணைப்பு நிலைய ஊழியர் ஒருவர் கம்பியால் தாக்கியதாகவும், தனக்கு கையில் காயம் ஏற்பட்டு 7 தையல் போட்டுள்ளதாக சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்