ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற 26 ஆம் தேதி (நாளை) வரை நடைபெற உள்ள கோடை விழாவில் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 



இன்றைய நிகழ்வுகள்:


ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள் கலந்து கொள்ள உள்ளது. இதேபோன்று ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை, கன்னி போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல் துறையைச் சார்ந்த செல்லப் பிராணிகளுக்கான கீழ்படிதல் மற்றும் சாகச நிகழ்ச்சி போன்று போட்டிகள் இடம்பெற உள்ளன. இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பல்சுவை நிகழ்ச்சி, சேர்வையாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.


போக்குவரத்து மாற்றம்:


இதனை காண்பதற்காக தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கள் கட்சியின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நாளை மாலை ஏற்காடு கோடை விழா முடிய உள்ள நிலையில், வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலை பாதை ஏற்காடு செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும். ஏற்காட்டில் இருந்து சேலம் வருவதற்கு குப்பனூர் வழியை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 



மலர் கண்காட்சி:


மலர் கண்காட்சியை ஒட்டி அண்ணா பூங்காவில் ஏழு லட்சம் மலர்களைக் கொண்டு காற்றாலை வடிவிலான மலர் அலங்கார வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களான டால்பின், மீன், முத்துச்சிப்பி, ஆக்டோபஸ் என பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 


வார இறுதி நாள்:


47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (நாளை) முடிவடைய உள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி நாள் என்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஏற்காட்டில் கடும் பணி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.