சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு குறித்து தகவல் அறிந்த வருவாய் துறை, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.



நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு காரணமாக சேலத்திலிருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாற்று பாதையாக சேலம் குப்பனூர் - ஏற்காடு சாலையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேற்று ஏற்காடு வருகை தந்தனர். இருப்பினும் மண்சரிவின் போது மலைப்பாதையில் வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே மண்சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் இவற்றிலிருந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.


ஏற்காடு கோடை விழாவிற்கு இன்னும் சரியாக பத்து நாட்களே உள்ளதால் சாலைகளை விரைந்து சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனமழை காரணமாக நான்கு முறை மண்சரிவு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக இரண்டாம் கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக சேலம் - ஏற்காடு பிரதான சாலை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் 163.1 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பி.என்.பாளையத்தில் 34 மி.மீ மழை பெய்தது, கங்கவல்லியில் 32 மி.மீ மழை பதிவானது, சேலத்தில் 27.1 மி.மீ, ஏற்காடு 24 மி.மீ, மேட்டூர் 8.2 மி.மீ, தம்மம்பட்டி 7.0 மி.மீ, காரியகோவில் 7 மி.மீ, ஓமலூர் 5.4 மி.மீ, காடையாம்பட்டி 5 மி.மீ, எடப்பாடி 5 மி.மீ, சங்ககிரியில் 2.4 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.