Teacher POCSO Arrest: தொடரும் பாலியல் சீண்டல்கள்... ஏற்காட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது.
Yercaud : விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது மாணவியரிடம் பாலியல் சீண்டல் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறியவுடன் மாணவிகள் சிலர் அறிவியல் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை தெரிவித்துள்ளார்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியின மாணவ மாணவிகள் பயிலும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் இளையகண்ணு என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகலைவா பள்ளியில் கருமந்துறை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து பல மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு சேலம் தும்பல் நொய்யமலை பகுதியில் வசித்து வரும் இளைய கண்ணு என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இங்கு அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அன்று சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள் இப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது மாணவியரிடம் உங்களுக்கு பாலியல் சீண்டல் ஏதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் உங்களது பெயர் வெளியில் வராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று கூறியதை அடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணுவின் மீது பாலியல் சீண்டல் குறித்து புகார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு மீது குழந்தைகள் நல அலுவலர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவலர்கள் ஏகலைவா பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க; Thanjavur : போக்குவரத்துக்கு இடையூறாக உணவுக்கடைகள்... அதிரடியாக அகற்றிய நெடுஞ்சாலைத்துறை
அப்பொழுது அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு மீது பல மாணவிகள் பாலியல் சீண்டல் குறித்து புகார்கள் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு போக்சோ வழக்குகளில் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.