தருமபுரி மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக 8 அணைகள் உள்ளன. இருந்தபோதும் மாவட்டத்தின் பெரும்பகுதி விளைநிலங்கள் கோடைகாலத்தில் பாலைவனத்துக்கு நிகராக வறட்சியை வெளிக்காட்டத் தொடங்கிவிடும். இவ்வாறான நிலங்களில் பருவ மழைக்காலங்களில் குறுகிய கால பயிர்களை மட்டுமே சாகுபடி செய்ய முடியும். இந்த மாதிரியான சாகுபடி முயற்சிகளும் கூட பயிர்களில் ஏற்படும் நோய்த் தாக்குதல், விவசாய பணிகளுக்கான ஆள் பற்றாக்குறை, பயிர்களுக்கு குரங்கு, மயில், காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகளால் ஏற்படும் சேதம் போன்ற சவால்களால் விவசாயிகளுக்கு நஷ்டத்தையே பரிசளித்து வருகிறது. எனவே, விவசாயிகளில் பலரும் மரப்பயிர் விவசாயத்துக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இந்த மரப்பயிர்களுக்கு தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து ஊற்றுகின்றனர். 



 

இதில் கிராமங்களில் உள்ளவர்கள் ஆழ்துளை கிணறுகள், குடிநீர் குழாய்களில், 24 மணி நேரமும், நினைக்கும் நேரத்திலும் தணாணீர் எடுத்து வருகின்றனர். ஆனால் மலைகளை ஒட்டியும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாயிகள் கிணற்றை நம்பியே இருந்து வருகின்றனர். ஆனாலும், கோடை காலங்களில் வறட்சி தன் கோர முகத்தை காட்டும் போது, இந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மரப்பயிர்களை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஆளாக்கி விடுவதும் சிரமமாக அமைந்து விடுகிறது. 



 

இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சிக்கு இலக்காகும் பென்னாகரம் வட்டத்தில் உள்ள சில விவசாய கிராமங்களில் 35 விவசாயிகளை தேர்வு செய்து ‘மேனுவல்’ முறையில் குறைந்த நீரில் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தி பயிர்களை காக்கும் பயிற்சியை தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியது. நபார்டு வங்கி மூலம் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் திசையெங்கும் வீசிச் செல்லப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பழைய மண் சட்டிகள் போன்றவற்றின் அடிப்பகுதியில் சிறிய துவாரமிட்டு, அதன் வழியே துணியால் ஆன திரியை செலுத்தி விட வேண்டும். பாட்டிலின் வெளியே சிறிதளவு திரி நீட்டியிருக்கும்படி அமைத்த பின்னர் அவற்றில் தண்ணீரை நிரப்பி செடிகளின் அருகே வைத்து விட்டால், சுமார் 2 மணி நேரத்துக்கு துளித்துளியாய் அந்த தண்ணீர் செடிகளின் வேரைச் சுற்றி ஈரத்தை பரப்புகிறது.இந்த பயிற்சி பெற்றவர்களில் வட்டுவன அள்ளி, பெரிய தும்கல், சின்ன தும்கல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் இந்நுட்பத்தை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.



 

இதில் மா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட கனிகள் தரும் மரக்கன்றுகள், மர சாமான்களுக்கு பயன்படும் மரக்கன்றுகள் ஆகியவற்றை நட்டு பராமரித்து வருகின்றனர். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அவற்றை பராமரித்து வளர்த்து விட்டால் பின்னர் அவை மானாவாரி நிலையை அடைந்து விடும். அதுவரை, ஒவ்வொரு ஆண்டின் கோடை காலமும் அந்த மரக் கன்றுகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதனால் தண்ணீர் கிணற்றிலிருந்து குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றியுள்ளனர். தற்போது நபார்டு வங்கியின் நீர் மேலாண்மை திட்டத்தின் பயிற்சியின்படி, பிளாஸ்டிக்  குடிநீர் பாட்டில்கள், பானைகள் மூலமான இந்த  ‘மேனுவல்’ சொட்டுநீர் பாசன நுட்பம் அமைந்துள்ளது.

 



 

இதில் குறைந்த நீரைக் கொண்டு செடிகளின் வேரைச் சுற்றி ஏற்படுத்தப்படும்  ஈரம், கூடுதல் நாட்கள் வரை உலர்ந்து விடாமல் இருக்க வேரைச் சுற்றி காய்ந்த சருகுகளைக் கொண்டு மூடாக்கு ஏற்படுத்தி உள்ளனர். ஒரு செடிக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வந்த நிலையில், இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு குடம் தண்ணீரில், 10 கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முடிகிறது. மேலும் 5 லிட்டர் தண்ணீர் உள்ள மண் பானையில் வைத்தால், சுமார் 3 நாட்களுக்கு ஈரப்பதம் உள்ளது. இந்த முறையால் குறைந்த தண்ணீர், குறைந்த ஆள் தேவை, குறைந்த நேரம் ஆகியவற்றை கொண்டு செடிகளை பராமரிக்க முடிகிறது. இந்த முறை எல்லோரும் பின்பற்றினால், தண்ணீர் வீணாகாமல்,சிக்கனமாக பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.