உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சேலம் உடையாபட்டி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 6,500 மாணவர்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவீன உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி தங்களது தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதனால் மக்களிடத்தில் அஞ்சல் மற்றும் கடிதம் போன்ற எழுத்து சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் குறைந்து வருகிறது. எனவே அஞ்சல் எழுதுவதின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெற்றது. இது 6,500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதங்களை எழுதியவர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்தும், கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கடித ஆர்வலர் ஈசன் இளங்கோ மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் மகிழ்ச்சியுடன் தங்களது கடித்ததை அனுப்பினர்.



இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், “அஞ்சல் அட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பாடத்தில் உள்ளது. ஆனால் இதுவரை நாங்கள் மதிப்பெண்காக மட்டுமே அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி வந்தோம். ஆனால் இன்று உண்மையான அஞ்சல் அட்டையில் தங்களது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. செல்போனை பயன்படுத்தி தகவல்களை பிறருக்கு அனுப்புவதை விட அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியது புது அனுபவமாக உள்ளது. இனி வரும் காலங்களில் பண்டிகை நாட்களில் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் மூலமாக தகவல்களையும் வாழ்த்துக்களையும் பரிமாற உள்ளோம்” என்று கூறினர்.



தொடர்ந்து, கடிதம் ஆர்வலர் ஈசன் இளங்கோ கூறுகையில், "நாம் அனைவரும் இழந்து வரும், இழக்க கூடாத ஒரு பழக்கம் கடிதம் எழுதுவது. கடிதம் என்பது நினைவாற்றலையும், கற்பனையையும் வெளிக்கொண்டுவரும் பழக்கமாகும். மேலும் உணர்வு பூர்வமான விஷயங்களை பகிர்வது மூலம் மனித நேயம் வளர்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகையில் கடிதங்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது விஞ்ஞான உலகின் வளர்ச்சி காரணமாக அனைத்தும் காப்பி, பேஸ்ட், டெலிட் என்று ஒன்னும் இல்லாமல் போய்விடுகிறது. செல்போன் வந்த பிறகு வாழ்த்து சொல்வது கூட யாரோ ஒருவர் அனுப்புவதை அப்படியே பிறருக்கு அனுப்புகிறோம். உணர்வு பூர்வமாக ஒருவருக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது இல்லாமல் போய்விட்டது. ஒரு மாணவன் எழுதத் தொடங்கினால் சிந்திக்க தொடங்குவான். சிந்தித்து செயல்பட்டால் அவன் சிறந்த மனிதனாக மாறுவான். அதற்காகத்தான் இன்று உலக அஞ்சல் தினத்தில் சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் 6,500க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அஞ்சல் அட்டையை வழங்கி கடிதம் எழுதுவது எப்படி எனக் கூறியுள்ளோம். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கடிதம் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கடிதம் என்பது எழுதிய பதிவு செய்யப்படாத பக்கமாக வாழ்வில் வழி நடத்தும் இன்று மாணவர்களிடையே கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.