பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக தாய்பால் வார விழா ஆகஸ்டு 1 முதல் 7 ஆம் தேதி வரை ஒரு வாரகாலம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் பாலூட்டும் தாய் மார்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார். மேலும், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி வள்ளுவர் சிலை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்ப்பால் தானம் வழங்கிய பெண்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். குறிப்பாக முப்பதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் தாய்ப்பால் வங்கி சேலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒராண்டில் மட்டும் 8795 லிட்டர் தாய்ப்பாலை, 9 ஆயிரத்து 45 பெண்கள் முன்வந்து தானமாக கொடுத்துள்ளனர். குறிப்பாக 2023 ஆண்டில் ஆறு மாதத்தில் மட்டும் 720 தாய்மார்கள் 5,153 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அனைவரும் தாய்ப்பால் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்கள் அழகு குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் அழகுக்கு எந்தபாதிப்பும் இருக்காது, எனவே பெண்கள் தாய்ப்பால் தானம் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைகள் தாய்ப்பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப்பாலை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அது மிகவும் தவறானது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலை விட அதிகமாக தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள் தங்களது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தாய்ப்பாலை பிடித்து அதனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் இன்றி தவித்து வரும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.