Salem Weather: 124 ஆண்டுக்கு பின்.. கோடைக்கு முன்பே வெளுத்து வாங்கும் வெயில்... 100 டிகிரியை விரைவில் எட்டும் சேலம்
1901 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இதுபோன்ற வெயில் கொளுத்திய நிலையில், 124 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு பிப்ரவரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக பழச்சாறு, குளிர்பானங்கள் விற்பனை கோடை காலத்திற்கு முன்பே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சூரியனின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலங்களாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதங்களில் உடல் உஷ்ணம், கொப்பளங்கள், மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக வெயிலின் உச்சம் என்று கருதப்படும் 100 டிகிரி வெப்பம், ஏப்ரல் இறுதி வாரத்தில் தான் பதிவாகும். அதிலும் மழைமறைவு பிரதேசமாக கருதப்படும் சேலம் மாவட்டம், மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில் கோடை தொடங்கும் முன்பே நாட்டின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் கடந்த மாதத்தை நடப்பு மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் வரும் கோடை காலத்தில், வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் இயல்பைவிட வெயில் அதிகமாக இருந்தது. அதற்கு முன்பு 1901 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இதுபோன்ற வெயில் கொளுத்திய நிலையில், 124 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு பிப்ரவரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.
சேலம் சுற்றுப்புற மாவட்டங்களான நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியிலும் ஏப்ரல், மே மாதங்களில் இதர மாவட்டங்களை விட வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால், நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்தில் காலையில் பனியின் தாக்கம் காரணமாக குளிர் நிலவுகிறது. இப்படி மாறுப்பட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 5 முதல் 8 டிகிரி அதிகரிக்கும் என்றும், அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மதிய வேளையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொது மக்கள் பழச்சாறு, தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், கம்மங் கூழ், குளிர்பானங்கள் விற்பனை களைக்கட்டியுள்ளது.
சேலத்தில் கடந்த 24ம் தேதி 96.3 டிகிரியும், 25ம் தேதி 94.6 டிகிரியும், 26ம் தேதி 95.8 டிகிரியும், 27ம் தேதி 95.4 டிகிரியும், 28ம் தேதி 96.1 டிகிரியும், மார்ச் 1ம் தேதி 94.5 டிகிரியும், நேற்று 95.9 டிகிரியும் வெப்பம் பதிவாகியது. நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி -மாவட்டங்களிலும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. மதிய நேரத்தில் வெயில் அதிகரித்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என ஆய்வு மையம் வெப்பநிலை அளவு குறித்து வெளியிட்டுள்ளது. மேலும், மார்ச் மாதம் இறுதிக்குள் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தொடர் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.