சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கையெடுத்து கும்பிடுகிறேன், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் அவர்கள் உடனடியாக கையெழுத்து போட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை பின்பற்றும் நடவடிக்கையை வரவேற்கிறேன், அதே நேரத்தில் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடக்க நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், மற்றும் இரும்பாலை தொழிற்சாலை போக மீதமுள்ள 3500 ஏக்கர் நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது மாநில அரசு எடுத்துக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.



காவிரி உபரி நீர் திட்டத்தில் 5 டிஎம்சி தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 620 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது, எனவே சேலம் மாவட்டத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில் நீர் பாசன திட்டத்திற்கு என வெறும் 8000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோதாது, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வீதம் ஒதுக்கி 5 ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு இனி ஒரு பிடி மண் எடுக்க கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 


புதிதாக சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடச்சேரி, ஒரத்தநாடு உள்ளிட்ட ஆறு இடங்களில் புதிய சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது டெல்டாவை அழிக்கின்ற ஒரு மிகப்பெரிய சூழ்ச்சியாகும். எனவே இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம், இது தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் உடனடியாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு ஆளுநர் அவர்களே காரணம். தற்போது மீண்டும் ஆன்லைன் தடை சட்டம் மசோதா, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஆளுநர் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது, ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 



இந்த ஒரு வாரம் அவருக்கு போதுமானது. எனவே மனித உயிர்களை பாதுகாக்க கையெடுத்து கும்பிடுகிறேன், அந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவித இட ஒதுக்கீட்டை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், இதில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்து ஓராண்டு ஆகிறது . அதனால் தமிழக அரசு உள் ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை திரட்டி, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும். நாடு முழுவதும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என கூறும் தமிழக முதல்வர், முதல் கட்டமாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்டமன்றத்தில் மே மாதத்திற்குள் அறிவிக்காவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த கட்டமாக சமூக நீதி போராட்டத்தை முன்னெடுக்கும். நீட் தேர்வு 100% தேவை இல்லை என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு, இதனால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க தமிழக அரசு, நீதிமன்றம் மூலமாக சட்டப் போராட்டம் நடத்தியாக வேண்டும். வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம். இதற்கு வியூகம் அமைக்கும் வகையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையும்" என்று தெரிவித்துள்ளார்.