தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நகை அடகு வைத்து கடனுதவி பெற்றுள்ளனர். தற்போது 5 சவரன் நகை வரை பெற்ற கடனுதவிகளை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து பயணிகளின் பட்டியலை வெளியிட்டு, உரிய நகைகளை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் நகைக் கடன் பெற்ற பயனாளிகளிடம் வங்கியில் பணியாற்றும் செயலர், தலைவர் உள்ளிட்ட சிலர் விவசாயிகளிடம் நகை திருப்பி தருவதற்காக முறையாக கையகப்படுத்த பெற்று கொண்டு, நகைகளை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர். தொடர்ந்து நகைகளை எடுத்து வந்து தருவதாக கூறிவிட்டு, 2000 முதல் 5000 வரை பயனாளிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர்.
இதில் ஏலகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற மாற்றுத் திறனாளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக முக்கால் பவுன் (6 கிராம்) தங்க நகையை 9 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வைத்துள்ளார். தொடர்ந்து குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக 9 வருடமாக மீட்க முடியாமல் வட்டியை மட்டும் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி கிடைத்து என மகிழ்சியில் இருந்த ஆறுமுகம் நகையை பெற்றுக் கொள்ள சென்றுள்ளார். அப்பொழுது கையகப்படுத்த பெற்றுக் கொண்டு, மூன்று நாட்கள் அலைக் கழித்துள்ளனர். தொடர்ந்து நகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால் 2,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளும் கூட்டுறவு சங்கத் தலைவரும் கேட்டதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
இதனையடுத்து பணத்தை உடனடியாக கொடுக்க முடியாததால் மாற்றுத் திறனாளியான ஆறுமுகத்தை நான்கு நாட்கள் இழுத்தடித்து உள்ளனர். பின்னர் வேறு வழியின்றி 5 ரூபாய் வட்டிக்கு 2000 ரூபாய் வாங்கி சென்று அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை உயரக்கூடும் அழைத்து சென்று வாங்கி உள்ளனர். பின்னரே அவருடைய 6 கிராம் நகையை திரும்ப கொடுத்துள்ளனர்.
ஆடு மாடு மேய்த்து கொண்டு 9 வருடங்களாக நகையை மீட்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த மாற்றுத் திறனாளி ஆறுமுகத்திற்கு தமிழக அரசு நகை தள்ளுபடி செய்தாலும் நகையை வாங்க வலுக்கட்டாயமாக 2000 லஞ்சம் கொடுத்த பிறகே 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது 6 கிராம் நகை கிடைத்துள்ளது. இந்த சங்கத்தில் 250 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அனைவரிடத்திலும் பணம் பெற்றுக் கொண்டே திருப்பி கொடுத்ததாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சிரியிடம் கேட்டபோது, நகைக் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளிடம், பணம் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுத்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தப்படும். அது நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.