தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33000 கன அடியாக இருந்த நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடியாக நீர்திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 80,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்து, தண்ணீர் செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் 5-வது நாளாக தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் நீர்திற்ப்பு அதிகரிப்பு மற்றும் தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் வள அணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையால் பாப்பிரெட்டிபட்டி வாணியாறு அணை நிரம்பியதால், 1 மாத காலமாக உபரி நீர் முழுவதும் ஆற்றில் திறப்பு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அணையின் நீா் படிப்பு பகுதியான சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் தொடர் மழை கன மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம், 65.27 அடி உயரத்தில் தற்போது 63அடியாக உயர்ந்துள்ளது. இதனல் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே அணையின் பாதுகாப்பு கருதி 63 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கலாம் என்ற பொதுப்பணித் துறையின் முடிவின் படி கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி 63 அடிநீர் நிரம்பியது. அன்று முதல் உபரி நீர் பழைய ஆய்க்கட்டு கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் வரை மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்திருந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 45 கன அடியாக இருந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அந்த உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பறையப்பட்டி ஏாி முழுவதும் நிரம்பி உபரி நீர் வாணியாற்றில் கலந்து வருகிறது. மேலும் ஆண்டுதொறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிரம்பும் அணை, கடந்தாண்டு தொடர் மழையால், ஆகஸ்ட் மாதம் நிரம்பி வழிகிறது. இனிவரும் பருவ மழையில், அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்படும் பொழுது அணைத்து ஏரிகளும் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது.