கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக அதிகரித்து வந்த நீர்வரத்து நேற்று குறையத் தொடங்கியுள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.05 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 649 கன அடி நீர் வந்துகொண்டு இருந்த நிலையில் நேற்று 7 ஆயிரத்து 272 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 934 கன அடியாக சரியத் துவங்கியுள்ளது. நீர் இருப்பு 33.60 டி.எம்.சியாக குறைந்துள்ளது. 



கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையிலிருந்து 8,283 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120.88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 897 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,483 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


இதேபோன்று கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25-ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 649 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 7 ஆயிரத்து 272 கன அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.03 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 34.46 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது. அணையின் நீர்வரத்து 8 ஆயிரத்து 649 கன அடியிலிருந்து 7 ஆயிரத்து 272 கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து மீண்டும் சரியத் துவங்கியுள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.