காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 6,000 கன அடியாக குறைந்துள்ளது. 

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில பெய்து வந்த கனமழையால் கர்நாடகா அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சேகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு  வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது‌. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவும் கடுமையாக குறைக்கப்பட்டது. இதில் கிருஷ்ணராக இருந்து 1449 கன அடியும், கபினியில் இருந்து 2500 கன அடி என வினாடிக்கு 3949 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நேற்று வினாடிக்கு 12,000 கன அடியாக இருந்து நீர்வரத்து, 6,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினியருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5 நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால், நீர் திறப்பு மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று மாலையில் நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.