காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 9,546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 29,072 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 29,964 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை காட்டிலும் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 109.45 அடியாக இருந்த நிலையில் இன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 112.77 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.32 அடி உயர்ந்துள்ளது. மேலும் தற்போது அணையின் நீர் இருப்பு 82.40 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து தொடர்ந்து இதே போல் நீடித்து வந்தால் இந்த மாத இறுதிக்குள் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்பட்டுள்ள 46,000 கன அடி தண்ணீர் நாளை காலை தமிழகம் வந்தடைய உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய நீர்வள மேலாண்மை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது, மேட்டூர் அணையின் நீர் வரத்து 40,000 கன அடியாக உள்ளது. எனவே இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை மே மாதம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.