தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 14 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாலக்கோடு ஒன்றியம் குடியனஹள்ளி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதனால் அந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறவில்லை. தொடர்ந்து மீதமுள்ள 13 பதவிகளுக்கு வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இதில் 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 3 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியாக களத்தில் உள்ளனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-ஆவது வார்டு உறுப்பினர் பதவி, நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சனஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கடத்தூர் ஒன்றியம் சில்லாரஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய மூன்று பதவிகளுக்கான இடை தேர்தல் நடைபெறுகிறது. 



 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் எச்சனஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு பேரும், கடத்தூர் ஒன்றியம் சில்லாரஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 57,364 வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய உள்ளனர்.  இதற்காக 93 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 



 

இதில் 21 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வீடியோ கிராபர்கள் மூலம் வாக்குப் பதிவு,  பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தல் வாக்கு பதிவினை 10 நுண் பார்வையாளர்கள் வாக்குப் பதிவு மையங்களை பார்வையிட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன், வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்குப் பதிவு மையங்களில் 700-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.