சேலத்தில் மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சோதனை என்ற பெயரில் அதிமுகவினர் வீடுகளில் தொடர்ந்து அச்சுறுத்த நினைக்கும் திமுகவை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர் இளங்கோவன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டு வரும் இளங்கோவன் கடந்த 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளங்கோவன் மகன் பிரவின் குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு உட்பட அவருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இளங்கோவனின் சகோதரர் மற்றும் சகோதரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கரங்களை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகளில் மூலம் வருவாய்க்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். புத்திர கவுண்டம்பாளையத்தில் இளங்கோவன் தற்பொழுது பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் சேலம் புத்திர கவுண்டபாளையம் பகுதியில் உள்ள இளங்கோவன் வீட்டின் முன்பாக ஏராளமான அதிமுக கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள இல்லத்திற்கு திரும்ப முயன்றபோது அவர்களில் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு உள்ளே நுழைந்து காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். புத்திர கவுண்டன்பாளையம் மெயின் சாலையில் தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்றொரு தொண்டர் வீட்டின் முன்பாக மண்ணெண்ணை உடன் வந்து அமர்ந்து இருந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கிக் கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.