சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மோகன் ஆன்லைனில் லோன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவரது உருவப்படத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆஃப் மூலமாகவும் கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களையும் குண்டர் படைகளை அனுப்பி மிரட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித நிவாரண நிதியும் வழங்குவதில்லை என தெரிவித்தார். பல முன்னணி நடிகர்கள் நடிகைகளை வைத்து ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் கடன்களை விளம்பரப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மேலும் ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கடன்கள், மைக்ரோ பைனான்ஸ் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மைக்ரோ பைனான்ஸ் விடுபவர்கள் கடன் வாங்கியவர் கடனை திரும்பச் செலுத்தாவிட்டால் அல்லது வட்டியை செலுத்தவில்லை என்றால் அவர்களது வீட்டு சுவற்றில் அழியாத மையை கொண்டு கடன் வாங்கியவர்களை கொச்சைப்படுத்தி எழுதுகின்றனர். இதனாலும் பலர் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்று அதிக வட்டிக்கு மைக்ரோ பைனான்ஸ் செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு. மேலும், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கடன், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்டவர்களை பெற்று தற்கொலை செய்யும் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை கருதி அவரது வீட்டில் ஒருவருக்கு படிப்பிற்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்கள் சரளமாக கிடைப்பது. காவல்துறையில் உள்ள ஒருசில கருப்பு ஆடுகள் மூலமாகவும் போதைப்பொருள்கள் விநியோகம் நடப்பதாகவும், தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் போதைதான் காரணமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டிய வேல்முருகன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றினால்தான் குற்றங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்றார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் கொடுத்துவிட்டு பிற மாவட்டங்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பது ஏற்புடையதல்ல என்றார். மேலும், இந்த முறை அதிகளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாகுபாடு பார்க்காமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்ற வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கிறது என்றார்.