சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் (75). இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சத்திய மங்கலத்தில் வனத்துறை அதிகாரி ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்திய மங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கும், இங்கிருந்து மீண்டும் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப் பட்டிருந்தார். அவர், இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். தனது 40 வயதில் சிறைக்குச் சென்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவருக்கு அவ்வப் போது சிறை அதிகாரிகள் பரோல் வழங்குவர். கடந்த மாதத்தில் 15 நாட்களுக்கு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் இன்று (25.05.2022) காலை 5:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மாதையன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் உள்ளது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த மாதையனின் உறவினர்கள் கூறும்போது, மாதையனுடன் சிறையில் இருந்த ஆண்டியப்பன், பெருமாள் உள்ளிட்ட 30 பேர் தமிழகம் மற்றும் கர்நாடகா சிறைகளில் கைதிகளாக உள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 16.1.1989 கைது செய்யப்பட்ட மாதையன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கைதியாகவே அவரை இறந்த நிலையில் எடுத்துச் செல்வது மனவேதனை அளிக்கிறது. இதேபோல 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கைதிகள் அனைவரையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என வீரப்பனின் கூட்டாளி அன்புராஜ் மற்றும் மாதையனின் மருமகன் முனுசாமி ஆகியோர் வலியுறுத்தினர். மேட்டூரை அடுத்த செங்கப்பாடி இவரது சொந்த ஊராகும். மூலக்காடு பகுதியில் உள்ள மாதையனுக்கு சொந்தமான நிலத்தில்தான் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதே நிலத்தில் மாதையன் உடலையும் அடக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.