வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இடஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து பாமக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் பாமகவை சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ள திமுகவிற்கு வன்னியர் என்றாலே பிடிக்காது. இந்த ஆட்சியில் இருக்கின்ற நான்கு அமைச்சர்கள் டம்மி பீஸ்ஸாகவும்,டம்மியாக வைத்துள்ளனர். மூத்த அமைச்சர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு துறைகளிலும் நிதி ஒதுக்கவில்லை இதுதான் வன்னியர்களுக்கு இந்த ஆட்சியில் இருக்கின்ற மரியாதை என்றும் கூறினார். முக்கியமான முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரண்டும் அவர்களுக்கு வைத்துள்ளனர். எனவே வன்னியர்களுக்கு திமுகவில் அமைச்சர் பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், வன்னியர் பிள்ளைகளை படிக்க விடுங்கள் என்றார். சேலம் மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்த வசதிகளும் ஏற்படுத்த முடியவில்லை என்று திமுக கவுன்சிலர்கள் புலம்புகிறார்கள். 2026 இல் மக்கள் அகற்றுவதற்கு முன்பாக சட்டமன்ற கூட்டத்தை இந்த ஆண்டாவது கூட்டுங்கள். அவ்வாறு கூட்டாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் விமர்சனம் செய்தார். ஒட்டுமொத்த மக்களையும் வஞ்சிக்கின்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நாள் வந்துவிட்டது. அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்வார்கள். இனி ஒருமுறை ஏமாற்றத்தை தாங்கமுடியாது. பாமக தலைவர் அன்புமணி ராமதாசை வெற்றி பெற செய்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும். அன்புமணி ராமதாஸ் போன்று அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை. தமிழகத்தை பாமக நினைத்தால் ஸ்தம்பிக்க வைக்க முடியும். ராமதாசை கொச்சைப்படுத்தி பேசுகிறது சரியா என்று கேள்வி எழுப்பினார். தவறை திமுக உணரும் காலம் வெகு விரைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை எந்தவித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் கூறி ஆயிரம் நாள் ஆன நிலையில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டரை கோடி வன்னியர்கள் இந்த 10.5% உள் இட ஒதுக்கீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக திமுக அரசு வன்னியர்களுக்கான 10.5% உள்ள இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று கூறினார். மேலும், தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என எச்சரித்தார்.