நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாஞ்டை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் வன்னியரசு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெரியார் பிறந்தநாள், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை செயலாளர் வன்னியரசு, தேசிய அளவில் மது ஒழிக்கவும், தமிழ்நாட்டிற்கான வரி வருவாய், சிறப்பு நிதி வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மது ஒழிப்பு மாநாட்டில் முதல்வர் பங்கேற்பதாக கூறி உள்ளார். முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பதே விசிகவின் வெற்றியாக பார்க்கிறோம் என்று கூறினார்.
முதல்வர் உடனான சந்திப்பு:
முதல்வர் சந்திப்பிற்கு பின்னர் மாநாட்டின் கொள்கை மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, விசிகவின் கொள்கையையோ, மாநாட்டின் பெயரையோ மாற்றவில்லையே. பூரண மதுவிலக்கு என்பதே விசிகவின் இலக்கு. தமிழகத்தில் படிப்படியாக மது குறைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி உடன் திருமா சந்திப்பு:
விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பு குறித்த கேள்விக்கு, இதுவரை இருவரின் சந்திப்பு குறித்து எந்தவித தகவலும் அளிக்கப்படவில்லை. விசிக மண்டல செயற்குழு கூட்டம் நாளை சேலத்தில் நடக்கிறது. இதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சேலம் வந்துள்ளார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இபிஎஸ் உண்டான சந்திப்பு இருந்தால் நிச்சயம் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவிக்கப்படும் என்றார். மேலும், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சியின் மகளிரணி தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. கட்சி உயர்நிலை குழு ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
பாமகவை மாநாட்டிற்கு அழைக்காத காரணம்:
மது விலக்கு தொடர்பாக ராமதாஸ் நீண்டகால போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவரை நாங்கள் எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் கடந்த கால கசப்பான அனுப்பவங்களால் அவரை நம்ப முடியாது. ஈழ தமிழர்கள் விடுதலை போராட்டம் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது, ராமதாஸ் போராட்டத்தில் பங்கேற்பதாக கூறியிருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. இதுபோன்று முன்னுக்கு பின் முரணாக மாற்றி மாற்றி பேசியதால் ஏற்பட்ட கசப்பான அனுப்பங்களால் மாநாடு தொடர்பாக அவரை சந்திக்கவில்லை என்று கூறினார்.