வாச்சாத்தி மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பு வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய நிர்வாகிகளுக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

1992-ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து இதுவரை வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் செய்து வந்தனர். அதில் முக்கியப் பங்காற்றிய மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய தலைவரும், தற்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவராகவும் உள்ள பி.சண்முகம், துணைத் தலைவர் ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு, செயலாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் வாச்சாத்திக்கு வருகை தந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு  எல்லையில் இருந்து கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடன் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட நிர்வாகிகள், சம்பவத்தின் முக்கிய நிகழ்விடமாக கருதப்படும் வாச்சாத்தி ஆலமரத்தின் அடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது வழக்கின் தீர்ப்பு குறித்தும், அதற்காக மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைத்தனர்.



 

அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாச்சாத்தி தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்படியே உறுதி செய்துள்ள தீர்ப்பாக இது அமைந்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கின் போது ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பினை தாண்டி, குற்றம் சாட்டப்படாத அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 12 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளிக்கப்பட்டபோதே எங்களுக்கு குறைபாடு இருந்தது. முக்கிய அலுவலர்களாக இருந்தவர்கள் அப்போது குற்றத்தை மூடி மறைக்க காரணமாக இருந்தார்கள். அவ்வாறான கடுமையான குற்றம் செய்திருந்த அவர்கள் இந்த தண்டனையில் இருந்த தப்பி இருந்தனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவது தமிழக அரசின் கையில் தான் உள்ளது.



 

முதலாவது குற்றவாளிகள் அனைவரும் உடனடியான கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும். இரண்டாவதாக அப்போதைய காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர், வன அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கு தான் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு கடமையை செய்ய வேண்டும்.தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம், குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை. இது தவிர ஒட்டு மொத்தமாக வாச்சாத்தி பகுதியின் முன்னேற்றத்திற்காக செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை யாவும் தமிழக அரசு செய்யவேண்டிய பணிகளாகும். 12 ஆண்டிற்கு பின் கிடைத்துள்ள இந்த தீர்ப்பின் படி மேலும் கால தாமதம் செய்யாமல், தீர்ப்பினை நடைமுறைப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை துரிதமாக தமிழகஅரசு செய்திட வேண்டும். இதனை தாமதப் படுத்துவது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரக்கூடிய சூழலை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.