வரலாற்று சிறப்புமிக்க தருமபுரி மாவட்டத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான மன்னன் அதியமான் முன்னொரு காலத்தில் தகடூரை மையமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவருக்கு பிறகு பல்வேறு சிற்றரசர்கள் தருமபுரியை ஆட்சி செய்து வந்தார்கள். அவ்வாறு சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்த காலத்தில் அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் தற்பொழுது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறியுள்ளது. இந்த பகுதியில் விவசாயம் செய்யும் போதும், வீடுகள் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போதும், மண்ணுக்கடியில் ஐம்பொன் சிலைகள், தங்க நாணயங்கள், அரிய வகை சிற்பங்களும், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கும்.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வீரபத்திர  துர்கம் சந்தைப்பேட்டை என்கிற இடத்தில் உள்ள மலையின் உச்சியில் ஒரு கோட்டை அமைந்துள்ளது. மலையின் மேல் சமதள பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் இந்த மலை கோட்டை அமைந்துள்ளது. மன்னன் அதியமானுக்கு பிறகு, கர்நாடகத்தை ஆட்சி செய்த விஷ்ணுவர்தன் என்ற சிற்றரசர், தேவர் மலை, தேவகிரி மலை, துர்க மலைகளுக்கிடையில் இந்த வீரபத்திர துர்க மலையில் கோட்டையை கட்டினார். இந்த கோட்டைக்கு மலையிலிருந்து 7 நுழைவாயில்களை அமைத்து நுழைவாயில்களை இரும்பு தண்டவாளங்கள், இரும்பு கதவுகளை பலப்படுத்தினார். இந்த கோட்டையை சுற்றி நான்கு திசைகளிலும் மலைகளின் மேல் பீரங்கி பாறைகள் வைத்து, அங்கிருந்து கண்காணித்து வந்தார்.

 


 

மலையில் மேல் வழிபாட்டுக்காக வீரபத்திர சாமி, வீரமகா காளி கோயில்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த கோவில்களுக்கு அருகில், ராமன் லட்சுமணன் ஜொனை, அரிஜனர் ஜொனை, நெல்லி ஜொனை, வீரபத்திர குளம் அமைந்துள்ளது. மேலும் மலையில் உச்சியில் ஓய்வெடுக்க மலையில் கற்களை குடைந்து படிகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் மீது குகைகள், தானிய கிடங்குகள், மருந்து கிடங்குகளும் இருந்துள்ளன. 

 


 

விஷ்ணுவர்தனுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் கடைசியாக இருந்த மன்னர் ஜெகவீர ராய்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை தலைமையிடமாக கொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரியில் 12 கோட்டைகளுக்கு அரசனாக இருந்து ஆண்டு வந்தார்.  அப்போது இந்த துர்கமலை கோட்டையை  தனது ஆயுத கிடங்காகவும் ஜெகவீர ராய்டு பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானும், ஆற்காடு நவாப்பும், ஜெகதேவி கோட்டையில் உள்ள மன்னன் ஜெகவீர ராய்டு மீது போர் தொடுத்துள்ளனர். அப்பொழுது ஜெகவீர ராய்டு தன்னிடம் வைத்திருந்த பொன், பொருட்கள் அனைத்தையும் எடுத்து வந்து துர்க மலை கோட்டையில் பதுங்கியிருந்துள்ளார்.

 

இதனையறிந்த திப்பு சுல்தானும், ஆற்காடு நவாப்பும் துர்க மலை கோட்டையின் மீது போர் தொடுத்துள்ளனர். இதனையடுத்து மன்னர் ஜெகவீர ராய்டு தன்னிடம் வைத்திருந்த பொன், பொருட்களை எடுத்து கொண்டு கோட்டையில் இருந்த வீரபத்திர குளத்தில் இறங்கி ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

 


 

இதனையடுத்து திப்பு சுல்தானும், ஆற்காடு நவாப்பும் துர்கமலை கோட்டையை மதுரைக்கும், மைசூருக்கும் இடையே தலைமை இடமாக வைத்திருந்துள்ளனர். இங்கு மக்களும் மன்னர்களும் வாழந்ததற்கான அடையாள சின்னங்கள், மலையின் மீது ஆங்காங்கே இடிந்த நிலையில் வீடுகள், ஆட்டுக்கல், மண்ணாலான வில்லை ஓடுகள், எழுத்துக்கள், சிற்பங்கள் அமைந்துள்ளது. மேலும் குளத்தின் அருகே மன்னர்கள் பயன்படுத்திய குதிரைகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக, கல்லாலான தொட்டிகளும் உள்ளன.

 


 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த துர்க மலை கோட்டை கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பழுதாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த மலையில் உள்ள கோட்டையில் பொன், பொருள்கள், விலை மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள், புதையல் கிடைக்கும் என எண்ணி, இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து, வீரமகா காளி கோவில், ஆயுத கிடங்கு உள்ளிட்ட இடங்களில் குழிகளை தோண்டியும் சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் வருகின்றனர்.

 


 

மேலும் ஏழு நுழைவாயிகளில் இருந்த இரும்பு பொருட்கள் தற்போது இல்லை. நுழைவாயிகள் அனைத்து பழுதாகி உள்ளது. அழிவின் விழிம்பில் உள்ள இந்த புகழ்பெற்ற துர்கமலை கோட்டையையும், கோட்டையில் உள்ள சிற்பங்களையும் உரிய முறையில் ஆய்வு செய்து சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பதுடன், இதனை ஒரு சுற்றுத்தலமாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.