சேலம் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சேலம் மாநகர் முழுவதும் 06.08.2024 முதல் 09.08.2024 வரை நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உத்திரவிடப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து மாற்றம்:
1) அம்மாபேட்டையிலிருந்து வரும் பேருந்து, பட்டை கோவிலில் வலதுபுறமாக திரும்பி, ப்ரியா காபி பார், கமலா ஆஸ்பிட்டல், டவுன் ரயில் நிலையம், முள்ளுவாடி கேட், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜாஜி சிலை, கொரோனா ரவுண்டானா, கோட்டை மைதானம், அப்சரா இறக்கம், குண்டுபோடும் தெரு வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடையலாம்.
2) திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தின் முதல் தளத்திற்கு செல்லும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மேற்குறிப்பிட்ட பாதை வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடையலாம்.
3) திருச்சி ரோடு வழியாக வந்துசெல்லும் பேருந்துகள் வழக்கம்போல் செல்லலாம்.
4) பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகள், அப்பா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க், காந்தி சிலை, வள்ளி டி கோ, புலிகுத்தி சந்திப்பு, அப்சரா இறக்கம், கோட்டை மைதானம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை, சுகவனேஸ்வரர் கோவில், புதிய மேம்பாலம், சுந்தர் லாட்ஜ் வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மாற்றம்:
1) அம்மாபேட்டையிலிருந்து நகருக்குள் வரும் கனரக / சரக்கு வாகனங்கள் டன்லப் ஜங்சனிலிருந்து இடதுபுறமாக திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக தங்களது பயணத்தை தொடரலாம்.
2) பட்டை கோவிலிருந்து நகருக்குள் வரும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பாதையில் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், பட்டை கோவிலிலிருந்து நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் இடது புறமாக திரும்பி AA ரோடு வழியாக தங்களது பயணத்தை தொடரலாம்.
3) திருவள்ளுவர் சிலை வழியாக, கோட்டை மாரியம்மன் கோவிலை நோக்கி எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. மாற்றாக திருவள்ளுவர் சிலையிலிருந்து இடது புறமாக திரும்பி சுகவனேஸ்வரர் கோவில் வழியாக தங்களது பயணத்தை தொடரலாம்.
4) காந்தி சிலையிலிருந்து, பழைய பேருந்து நிலையம் நோக்கி கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள் வள்ளி & கோ, புலிகுத்தி சந்திப்பு வழியாக தங்களது பயணத்தை தொடரலாம்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் இடம்:
1) கன்னிகா பரமேஸ்வரி கோவிலிலிருந்து AA ரோடு வழியாக திருவிழாவிற்கு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் காந்தி சிலை வழியாக திருவிழாவிற்கு வரும் வாகன ஓட்டிகள், பெரியார் பேரங்காடி வளாகம், போஸ் மைதானம் வளாகம், ஆகிய இடங்களில் தங்களது வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2) திருச்சி ரோட்டிலிருந்து திருவிழாவிற்கு வரும் வாகன ஓட்டிகள், வள்ளி & கோ, குண்டு போடும் தெரு வழியாக சென்று விக்டோரியா வணிக வளாகம், பழைய பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வரும் வாகன ஓட்டிகள் கொரோனா ரவுண்டானா, அப்சரா இறக்கம், குண்டுபோடும் தெரு வழியாக சென்று விக்டோரியா வணிக வளாகம், பழைய பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தொடரும்படி சேலம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.