நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளான இன்று பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகரம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் கரைப்பு:
சேலம் மாநகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுமக்கள் வைத்துள்ள விநாயகர் சிலைகள் இன்று காலை 10 மணிக்குள் எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியான கன்னங்குறிச்சி மூக்கணேரியில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விநாயகர் சிலைகள் இன்று நண்பகல் 12 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று காலை 11.00 மணிக்குள் சிலை வைத்துள்ள பகுதிகளில் இருந்து எடுத்து ஊர்வலம் புறப்படும் இடமான எல்லைபிடாரி அம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
இதன்படி, சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி வரை செல்லும் வாகனங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா, நான்கு ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி, சேலம் நீதிமன்றம், மத்திய சிறை, மாவட்ட ஆட்சியர் பங்களா, ஐயந்திருமாளிகை வழியாக கன்னங்குறிச்சி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி முதல் பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா ரோடு, நான்கு ரோடு, அண்ணா பூங்கா, பெரியார் மேம்பாலம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு சேலம் மாநகர காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.