தருமபுரியில் நடப்பாண்டிற்கான புளி விற்பனையை பெருமாள் கோவிலில் பூஜை செய்து வியாபாரிகள் தொடங்கினர்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் புளி அதிகமாக விளைச்சல் அடைந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புளியை சுத்தப்படுத்தும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் புளியை கொள்முதல் செய்து சுத்தம் செய்து வருகின்றனர். இதற்காக தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கின்ற புளியை தவிர்த்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புளியை கொள்முதல் செய்து சுத்தப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புளி கொள்முதல் செய்யப்படுவதால், புளி சுத்தப்படுத்தும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் போதிய வருவாய் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதனால் தருமபுரி புளி வியாபாரிகள் சங்கத்தினர் ஆண்டுதோறும் புது புளிகளை மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். அதுவரை பழைய புளிகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் புளி வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.
இதனையடுத்து இந்த ஆண்டிற்கான புளி கொள்முதல் மற்றும் விற்பனையை வியாபாரிகள் சங்கத்தினர் தருமபுரி கோட்டை பெருமாள் கோயில் மற்றும் பாப்பாரப்பட்டி பெருமாள் கோயிலில் பூஜை செய்து விற்பனையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண்டுதோறும் புளி விற்பனையை மார்ச் மாதத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக கொள்முதல் செய்தால் வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே புலி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மார்ச் மாதத்திற்கு மேல் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புளி வியாபாரிகள் சங்க தலைவர் பச்சமுத்து பாஸ்கர், “தருமபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, அதனை சுத்தம் செய்யும் பணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த புளி சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் 90 சதவீதம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தருமபுரி மாவட்டத்தில் 20 சதவீதத்திற்கு மேல் புளிகள் கிடைக்கிறது. ஆனால் பல்லாயிரம் டன் கணக்கில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இதில் தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை இருந்து வந்தது. தற்பொழுது தருமபுரி புளி வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் புது புளி வருகின்ற வரை, பழைய புளிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் புது புளிகளை ஜனவரி மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்ய வேண்டுமென தீர்மானித்த பிறகு புளிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது” என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புளி வியாபாரிகள் மற்றும் புளி சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்