சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்வதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.



சேலம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, ஏற்காடு சுற்றுலா தளத்தில் பருவகாலம் தொடங்கியுள்ளதால் கொரோனா இரண்டாம் அலை பிறகு அரசினால் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்ந்து வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் ஏற்காடு இயற்கையை ரசிக்க அதிக அளவில் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர்.


கொரோனா பரவலுக்கு வாய்ப்புகள் உள்ளதால் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வார இறுதி நாட்களில் தடையும், பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் RTPCR சோதனை செய்து Negative சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும். ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தங்களிடமுள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு தங்களின் இருப்பிட விலாசம் பொருத்தப்பட்டுள்ள ஆதாரத்தை காண்பித்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவையடுத்து இன்று முதல் ஏற்காடு செல்லும் வழியான சேலம் - ஏற்காடு சாலை, வலசையூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலை மற்றும் டேனிஷ்பேட்டை சாலை ஆகிய மூன்றும் அடைக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் வன அலுவலர்கள் சோதனைக்கு பிறகே ஏற்காடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த உத்தரவு வரும் 9ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.



 


சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் தேர்வுநிலை பேரூராட்சி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இங்கு நடக்கும் வாரச் சந்தைக்கு வெளியூர் மக்கள் அதிகம் வருகை தரும் நிலை உள்ளதால் எடப்பாடி வாரச்சந்தை மூடப்படும் தாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஒரு மாதமாக சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று குறைந்து வந்தது. கடந்த நான்கு நாட்களில் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தமிழகத்திலேயே அதிக ஒரு நாள் உயிரிழப்பு சேலம் மாவட்டம் உள்ளதால் மக்கள் கவலை அடைந்து வருகின்றனர். கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ குழு இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.