ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-அதிகளவு கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். 

 

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வெளிநாடு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்கள் திறக்க தமிழக அரசு தளர்வுகளை வழங்கி வந்தது. இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மட்டம் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.


6 மாதங்களுக்கு பிறகு ஒக்கேனேக்கல்லில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி-அதிக கட்டுப்பாடுகளால் ஏமாற்றம்

 

இந்நிலையில் இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது. மேலும் சுற்றுலா தளத்திற்கு வருபவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் சென்று அருவியின் அழகை கண்டு ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் குளிப்பதற்கும், ஆயில் மசாஜ் செய்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டது.



 

 இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஒகேனக்கல் வர தொடங்கியுள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகையால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கலைக்கட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும் ஆயில் மசாஜ் செய்வதற்கும் அனுமதி இல்லாததாலும், தொடர்ந்து பரிசலில் சென்று பொம்மச்சிக்கல், ஐந்தருவி, மணல்திட்டு, கர்நாடக எல்லை போன்ற பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

 

மேலும் பரிசல் துறையில் இருந்து மாமரத்துக்கடவு வரைக்கும் பரிசல் பயணம் செல்வதால், பரிசல் பயணம் கூட திருப்தி அளிக்கவில்லை. இதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அருவிகளில் குளிக்கவும், ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். இதுபோன்று கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும். இதனால் தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் இருக்காது என சுற்றுலா தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.