சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் ஆட்டோ டிரைவர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இதில் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பலர் ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களிடம் சிலர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக கூறி நாராயணன், வேல்முருகன், அசோக், மணி, பிரபு மற்றும் இளங்கோ ஆகியோர் இன்று பிற்பகலில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர் இவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை எடுத்து தங்கள் மேல் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 6 பேரையும் டவுன் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 6 ஆட்டோ ஓட்டுநர்கள் தற்கொலை முயற்சியால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.



இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்த ஒரு சிலர் லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். இந்த தொகையை தராதவர்கள் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்த கூடாது என்று மிரட்டுகிறார்கள். இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களை நிறுத்த அனுமதி தராததால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து அதிகாரிகள் அனுமதி தரவேண்டும் என்று கூறினார். 



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருபவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இதுபோன்று தற்கொலை முயற்சிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. 


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)