தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்திருந்தார். முதல்வருக்கு சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபம் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு, சேலம் மத்திய மற்றும் சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 11 ஆம் தேதி (இன்று) காலை சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே சேலம் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 16 அடி உயர முழு திருவுருவ வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பின்னர், அண்ணா பூங்கா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக துறை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.96.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு நகர பேருந்து நிலையம், வணிக வளாக கட்டிடம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம், வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட பல கட்டிடங்களை நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து திறந்து வைக்க உள்ளார். சேலம் நகர பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர பேருந்து நிலையம் எனவும், நேரு கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 நேரு கலையரங்கம் எனவும், போஸ் மைதானத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 போஸ் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் 50,000 பயனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட முடிவற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை (12 ஆம் தேதி) நாளை காலை 9 மணி அளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் தமிழகத்தின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.