மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் செல்லும் பாதையில் செல்பி எடுக்க முயன்ற தாரமங்கலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தண்ணீரில் அடித்துச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் விடுமுறை நாள் என்பதால் உறவினர்களுடன் மேட்டூர் அணையை காணச் சென்றுள்ளனர். அப்போது மூன்று இளைஞர்களும் தண்ணீரில் இறங்கி செல்பி எடுக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்துச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்பதற்கு தகுந்த பாதுகாப்புடன் தண்ணீரில் இறங்கினர். ஏற்கனவே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவேரி கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையை காணச் செல்லும் சுற்றுலா பயணிகள் கரையோரங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களும் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கரையோர கிராமங்களிலும் காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை 42-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் கட்டி முடிக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் 42-வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 9.55 மணிக்கு எட்டியது.
அணை நிரம்பியதால் வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை , தீயணைப்புத்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியில் காவிரிக் கரையோரப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன.
காவிரி ஆற்றில் மூன்று இளைஞர்கள் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அறிந்து அந்தப் பகுதியில் பலர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.