சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மூன்று மாணவிகளும் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளனர். பின்னர் பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் மூவரும் வீட்டிற்கு செல்லாத நிலையில் இது தொடர்பாக பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது மூன்று பேரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பெயரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது மூன்று மாணவிகளும் சென்னையிலிருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி இருப்பது தெரியவந்தது. பின்னர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் சேலம் மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி காவல்துறையினர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளை சோதனை செய்தனர்.



அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்றில் இருந்து மூன்று மாணவிகளும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளனர். அவர்களை பள்ளப்பட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் மீட்கப்பட்டுள்ளது குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர், கீழ்ப்பாக்கம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவிகள் குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மாணவிகள் எதற்காக சென்னையிலிருந்து சேலம் வந்தனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதையடுத்து மூன்று மாணவிகளும் சேலம் மாவட்ட குழந்தைகள் காப்பாற்றத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.