அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் எனவும் இதற்கான வேட்புமனுத் தாக்கல் 3ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி நிறைவடையும் எனவும் 5ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 6ஆம் தேதி வேட்புமனுவும் திரும்ப பெறலாம் எனவும், 8ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையனிடம் அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படி ஒரு தேர்தலே அதிமுகவில் இல்லை என பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே கேள்வியை மற்றொரு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்கப்பட்டபோது, இது குறித்து தனக்கு இதுவரை முழுமையான தகவல் எதுவும் வரவில்லை. தகவல்கள் தெரிந்த பிறகு செய்தியாளர்களை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறி சென்றார்.
முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் மகள் திருமண விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நம்ரதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார். அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்படி ஒரு தேர்தலே அதிமுகவில் இல்லை என தேர்தல் ஆணையர் பொன்னையன் கூறினார்.
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு என்றும், அதிமுக தலைமை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவு என்றார். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்றார். சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார் என சாடினார்.
அதன் பின்னர் சேலம் வந்த பொள்ளாச்சி ஜெயராமன் இடம் செய்தியாளர்கள் கட்சித் தேர்தல் குறித்து கேட்டபோது, இதுவரை முழுமையான தகவல் எதுவும் வரவில்லை. தகவல்கள் தெரிந்த பிறகு செய்தியாளர்களை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறினார். அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.